பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது மத்திய அரசு – சட்டத்தை வாபஸ் பெறு என்கின்றனர் விவசாயிகள்.

SHARE

கடந்த 8ந்தேதி நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த 6வது சுற்று பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த சட்டங்கள் தொடர்பாக பல்வேறு யோசனைகள் அடங்கிய சமரச திட்டம் ஒன்றை விவசாய அமைப்பு பிரதிநிதிகளுக்கு மத்திய வேளாண்துறை இணை செயலாளர் விவேக் அகர்வால் அனுப்பி வைத்தார்.

இதில் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. அத்துடன் சந்தை அமைப்பு உள்ளிட்டவை தொடர்பாக இந்த சட்டங்களில் குறைந்தபட்சம் 7 திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு தயார் என கூறப்பட்டு இருந்தது.

ஆனால் மத்திய அரசின் இந்த யோசனைகளை நிராகரித்த விவசாயிகள், சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். அந்தவகையில் டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் யோசனைகளை விவசாயிகள் பரிசீலிக்க வேண்டும் என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது

விவசாயிகளுடனான சந்திப்புக்குப்பின் எங்கள் யோசனைகளை விவசாயிகளுக்கு அனுப்பி இருக்கிறோம். அவற்றை பரிசீலிக்குமாறு விவசாயிகளை கேட்டுக்கொள்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் எந்த நேரத்திலும் பேசுவதற்கு அரசு தயாராக உள்ளது.

புதிய சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளின் எத்தகைய கவலைகளையும், சந்தேகங்களையும் தீர்ப்பதற்கு அரசு திறந்த மனதுடன் தயாராக உள்ளது.

விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இருந்து பரிந்துரைகளை கேட்பதற்கும், அவற்றுக்கு தீர்வு காண்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் சட்டங்களை திரும்பப்பெறுவதிலேயே குறியாக இருக்கின்றனர். கடும் குளிர் மற்றும் கொரோனா அச்சுறுத்தலால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உடல்நிலை குறித்து கவலையாக உள்ளது.

எனவே போராட்டத்தை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுமாறு விவசாய சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளை கேட்டுக்கொள்கிறேன். அரசின் யோசனைகளை விவசாய அமைப்புகள் விரைவாக பரிசீலிக்க வேண்டும். அதன் மூலம் மேலும் பேச்சுவார்த்தைகள் தேவைப்பட்டால் நடத்த முடியும்.  இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment