பண்டிகை காலங்களில் உள்ளூர் பொருட்களை வாங்கி, இங்குள்ள வியாபாரிகளின் வாழ்விலும் ஒளியேற்றுங்கள் என பிரதமர் மோடி பேசியிருப்பது டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம். நவராத்திரி முடிந்து இன்னும் சில தினங்களில் தீபாவளி வர உள்ளது. இதற்காக நாடு முழுவதும் ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.
. கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைனில் விற்பனையாகும் வெளிநாட்டு பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உண்டு.
இந்நிலையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி, இங்குள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என இருவாரங்களுக்கு முன்பு ‘மன் கி பாத்’ உரையில் நரேந்திர மோடி பேசியிருந்தார். தொடர்ந்து நேற்று குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ”உள்ளூர் என்பதை நம் வாழ்வின் மந்திரமாக மாற்ற வேண்டும் என்று காலம் நமக்குக் கற்று கொடுத்திருக்கிறது. இன்று இருக்கும் உலகளாவிய பிராண்டுகள் ஒரு காலத்தில் உள்ளூர் பொருட்களே. ஆனால் அங்குள்ள மக்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியபோது, அவர்கள் உலகளாவியவர்களாக மாறினர். அதனால் தான் இன்று முதல் ஒவ்வொரு இந்தியரும் நம் உள்நாட்டு தயாரிப்பு மூலம் உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். Vocal for Local” என்றார்