இது ஒரு மருத்துவரின் பதிவு . தான் ஏமாற்றப்பட்டதை ஒரு சிறு கதை வடிவில் பதிவிட்டிருக்கிறார்.இன்றைய கார்பரேட் மருத்துவமைகள் தங்கள் வளர்ச்சிக்காக என்ன சதிகளை எல்லாம் அரங்கேற்றுகின்றது என்பதை தெளிவாக விளக்குகிறது இந்த பதிவு.
பெரிய நகரத்தின் புறநகர் பகுதியான எங்கள் ஏரியாவில் கடந்த 15 ஆண்டுகளாக டாக்டர் முத்து (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) தான் எங்கள் குடும்ப மருத்துவர். மதுரைக்கு அருகில் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்தவர்,தனது ஆற்றலாலும் மக்கள் மீது இருந்த அன்பாலும் உயர்ந்தவர்.நடுத்தர வாழ்க்கை என்றாலும் தனது குழந்தைகளுடன் சந்தோஷத்தில் மிதந்தார்.
எங்கள் பகுதியில் பலகோடி ரூபாய் செலவில் ஒரு புதிய கார்ப்போரேட் மருத்துவமனை உருவானது.அதன் நிர்வாகிகள் இவரை சந்தித்து மரியாதை செய்தனர்.
மேலும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த பிரம்மாண்ட மருத்துவமனையில் நீங்களும் இயக்குனர் ஆகலாம் என்று வலையை விரித்தனர்.டாக்டர் முத்துவை போலவே பல சிறிய மருத்துவமனை கிளினிக் வைத்திருந்த நடுத்தர குடும்ப மருத்துவர்கள் இந்த ஆசை வலையில் விழுந்தனர்.தங்கள் நோயாளிகளை கார்போரேட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப துவங்கினர்.

ஆரம்பத்தில் நிறைய வருமானமும் கிடைத்தது.கார்ப்போரேட் மருத்துவமனையோ நமது சிறிய மருத்துவர்களுக்கு கேளிக்கை விருந்து மற்றும் இன்ப சுற்றுலா போன்ற ஏற்பாடுகளை செய்து அவர்களை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்தது.நாளடைவில் நம்ம டாக்டர் முத்துவின் வாடிக்கை நோயாளிகள் முழுவதுமாக கார்ப்போரேட் மருத்துவமனையின் சிகிச்சையில் தங்களை மாற்றிக்கொண்டனர்.சில வருடங்களுக்கு பிறகு சொற்ப தொகை கொடுத்து இயக்குனர்களான மருத்துவர்கள் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டனர்.
டாக்டர் முத்துவும் நோயாளிகள் இல்லாத காரணத்தால் தனது கிளினிக்கை காலிசெய்து விட்டார்.
மக்கள் மருத்துவராக வலம் வந்தவர் இப்போது தனது ஊரையே காலி செய்துவிட்டுஇப்போது அதே இடத்தில் கார்ப்போரேட் மருத்துவமனையின் நகர்புற சிகிச்சை மையத்தில் மருத்துவ அதிகாரியாக மாத சம்பளத்தில் பணியில் இருக்கிறார்.
பாவம் பலகோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் பிரம்மாண்ட மருத்துவமனையில் வெறும் ஒரு லட்சம் செலவில் எப்படி நாம் இயக்குனராக முடியும் என்று அன்று அவர் யோசித்திருந்தால் இன்றும் அவர்தான் எங்கள் பகுதி மக்கள் மருத்துவர் என அவர் பதிவிட்டிருக்கிறார்.
ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் முதலில் அவனது பேராசையை தூண்டவேண்டும் என்பது விதி….இது மோசடி தொழில்களில் மட்டுமல்ல மருத்துவ தொழிலிலும் உண்மையாகி வருகிறது என்றால் அது மிகையல்ல