3வது அணி அமைப்பதற்கான தகுதி தங்கள் கட்சிக்கு வந்து விட்டதாக மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தெரிவித்தார்.
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்களுடன் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது, மக்களுடன் தான் கூட்டணி என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 2வது நாளாக இன்றும் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்தது. இதில், சட்டசபை தொகுதிவாரியாக கட்சியின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார். மேலும், ஆலோசனைக்கூட்டத்தில் தனித்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ‛சட்டசபைத் தேர்தலில் கழகங்களுடன் கூட்டணியில்லை. மக்களுடன் மட்டுமே மக்கள் நீதி மையம் கூட்டணி அமைக்கும். மூன்றாவது அணி அமைப்பதற்கான தகுதி தங்கள் கட்சிக்கு வந்து விட்டது. டில்லி சட்டசபை தேர்தலின்போது டில்லியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் போல தமிழகத்திலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.’ என அவர் கூறினார்.