இந்திய அரசியலமைப்பிற்கு சவால் விடும் வகையில் சீனாவின் உதவியை நாடுவோம் என கூறுபவர்களை கைது செய்து, 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கடந்த 11ம் தேதி ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘சீனாவின் ஆதரவுடன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 மீண்டும் கொண்டுவரப்படும் என நான் நம்புகிறேன்’ எனக் கூறினார்.
அதேபோல் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி கடந்த 23ம் தேதி செய்தியாளர்களிடம், ‛ஜம்மு காஷ்மீர் கொடியை ஏற்றினால் தான் இந்திய தேசியகொடியை ஏற்றுவோம்,’ என கூறினார். இருவரின் கருத்துகளும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் :பரூக் அப்துல்லாவோ அல்லது மெஹபூபா முப்தியோ யாராக இருந்தாலும் இந்திய அரசியலமைப்பிற்கு சவால் விடும் வகையில் சீனாவின் உதவியை நாடுவோம் என கூறுபவர்களை கைது செய்து, 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அப்படி பேசுபவர்கள் எப்படி சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.